Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ஆடை கட்டுப்பாடு விளம்பர பலகையை அனைத்து கோவில்களிலும் வைக்க உத்தரவிட முடியாது – உயர் நீதிமன்றம் அதிரடி!!

temple-16463011213x2-1

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என்ற பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையாக ஆடை அணிவதில்லை என்பதால், கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில், ஆடைக்கட்டுப்பாடு விதித்து, கோவில்கள் முன் விளம்பர பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், பிற மதத்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோரி, திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் அதுபோன்ற பலகைகள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், சில புகைப்படங்களை தாக்கல் செய்து, இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் முறையற்ற வகையில் ஆடைகளை அணிந்து செல்வதாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு கோவில்களிலும் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டால் போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளது என்பதால், ஆடை கட்டுப்பாட்டு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அதேசமயம் அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு குறித்த பலகைகள் வைக்க வேண்டுமென பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், கோவில்களுக்கு பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரவேண்டும் என்றும், இதை கோவில் நிர்வாகங்கள் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp