தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் வந்த நிலையிலும், தற்போது நாளுக்கு நாள் சற்று ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. எனவே, 3வது அலையை தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது.
செப்.,1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. எனவே, கொரோனா பரவலை தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே,1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பித்தார்.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது, வார இறுதிநாட்களில் கோவில்களில் வழிபாடு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வது உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட இருக்கிறது.
அதேவேளையில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.