சென்னை: தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்தாலும் பல மாவட்டங்களில் பங்குனி மாத வெயில் போல சுட்டெரித்து வருகிறது. நம்ம ஊரில் மழை பெய்யாதா என்று பலரும் வானத்தை பார்க்க இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை இடி மின்னலோடு பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது பருவமழை. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 8 செமீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை, விழுப்புரம், வால்பாறை, சோலையாறு, சிவகங்கை, நீலகிரி, செஞ்சி, கூடலூர், திருவண்ணாமலையில் பெய்துள்ள கனமழையால் கண்மாய்களிலும் ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. அதே நேரத்தில் வெப்பநிலையும் 39 டிகிரி வரை சுட்டெரித்துள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 39 டிகிரி வரை வெயில் சுட்டெரித்துள்ளது. திருச்சி, தஞ்சை, நாகையிலும் 37 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெயிலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யப் போவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரைக்கும் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருவண்ணாமலையில் மழை
திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அரியலூர், பெரம்பலூர், கடலூரிலும் 9,10ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகம் முழுவதும் மழை
வரும் 11ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் கனமழை முதல் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதோடு தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலை நகரில் மழை
சென்னையில் 48 மணிநேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரிசெல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

சூறாவளி காற்று வீசும்
இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை தென்கிழக்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அதேபோல் கேரளா கடலோரப் பகுதி ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் ,கேரளா கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.